தருமபுரி, ஆகஸ்ட் 19:
தமிழ்நாடு அரசின் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., இன்று (19.08.2026) நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் மாதத்திற்கான ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி, நாளை (20.08.2026) காலை 9 மணி வரை நடைபெறுகிறது.
மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வு காண்பது, அரசு இயந்திரத்தை மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு செல்வது மற்றும் அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
புதிய குளங்கள் அமைக்கும் பணி ஆய்வு
இதன் ஒரு பகுதியாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் B.பள்ளிப்பட்டி மற்றும் மஞ்சவாடி ஊராட்சிகளில், வளர்ச்சியடைந்த பாரதம் – ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் தலா ரூ.9.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளங்கள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே புதிய உழவர் சந்தை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார்.
ரூ.75 லட்சத்தில் சாலை பலப்படுத்தும் பணி
பட்டுகோணம்பட்டி ஊராட்சியில் நொங்கனூர் முதல் பட்டுகோணம்பட்டி வரையிலான தார் சாலையை, SEDP திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பழங்குடியினர் பள்ளியில் அடிப்படை வசதிகள் ஆய்வு
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நடுப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியின் வகுப்பறைக் கட்டிடங்கள், குடிநீர், மின்சாரம், கழிவறை, மாணவ, மாணவியர்கள் தங்கும் வசதி, விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
மேலும், மாணவ, மாணவியர்களிடம் அவர்களின் கற்றல் திறன் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து நடுப்பட்டி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் வருகை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
மலைவாழ் மக்களுக்கான சிறப்பு முகாம்
மஞ்சவாடி ஊராட்சியில் நடைபெற்ற மலைவாழ் மக்களுக்கான சிறப்பு முகாமையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, இ-பட்டா, பட்டா மாற்றம், வாரிசுச் சான்றிதழ், மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பெறுவதற்காக பொதுமக்கள் அளித்த மனுக்கள் மற்றும் வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் தங்களது துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் களத்தில் வழங்கப்படும் சேவைகளின் நிலை குறித்து தெரிவித்தனர்.
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து விரைந்து தீர்வு காணவும், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும் அவர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. சி. செம்மலை, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி பா. ஷெர்லி ஏஞ்சலா, உதவி இயக்குநர் ஊராட்சிகள் திரு. விமல் ரவிக்குமார், வட்டாட்சியர் திருமதி பார்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி மார்க்ரேட், திரு. அறிவழகன், உதவி பொறியாளர் திருமதி சத்தியவாணி உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)