பாலக்கோடு, ஆக.15 :
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் 80வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கிளை சார்பில் 9ஆம் ஆண்டு மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. நாட்டின் விடுதலைக்காக தங்களது செல்வம், உயிர் மற்றும் குடும்பங்களை அர்ப்பணித்த எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை நன்றியுடன் நினைவுகூரும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தருமபுரி மாவட்டத் தலைவர் ஜஹாங்கீர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாபு மற்றும் கிளை நிர்வாகிகளான நவாப், அமீர்ஜான், அஸ்மத், ஜாஃபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாவட்ட அரசு மருத்துவர் கன்யா, பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியம் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். உயிர் காக்கும் உன்னதப் பணியாக நடைபெற்ற இம்முகாம் சமூக நலனில் இளைஞர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. ரத்ததான முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்டச் செயலாளர் பாபு நன்றி தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இம்மாபெரும் ரத்ததான முகாம் பொதுமக்கள் மத்தியில் சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்தது.
.gif)

.jpg)