Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிர்ச்சி! குடிபோதையில் தாய், மகளை வெட்டிக் கொன்ற தந்தை – பரபரப்பு.


பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.31:


பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடிபோதையில் தாய் மற்றும் மகளை கொடுவாளால் தாக்கியதில் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிகாரப்பட்டி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (45). சமையல் மாஸ்டராக பணியாற்றி வரும் இவர், தனது தாய் உமாராணி (65) மற்றும் மகள் சின்மயாவுடன் வசித்து வந்துள்ளார். சுரேஷின் மனைவி ஷாலினி, கணவரை பிரிந்து சேலத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.


மகளை வெட்டியதாக கூறப்படும் சுரேஷ்

இந்த நிலையில், நேற்று இரவு சுரேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மகள் சின்மயாவிடம் சாப்பாடு கேட்டதாக கூறப்படுகிறது. சின்மயா தனது பாட்டி உமாராணியிடம் இருந்து சாப்பாடு எடுத்து வந்து சுரேஷிடம் கொடுத்துள்ளார். அப்போது மனைவி தன்னைப் பிரிந்து வாழ்வதற்கு மகளும் குடும்பத்தினரும் தான் காரணம் எனக் கூறி சுரேஷ் ஆத்திரமடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அங்கிருந்த கொடுவாளால் மகள் சின்மயாவை சுரேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது.


தடுக்க வந்த தாய்க்கும் நேர்ந்த கொடூரம்

மகள் அலறிய சத்தம் கேட்டு உமாராணி அங்கு வந்து சுரேஷை தடுக்க முயன்றுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த சுரேஷ், தனது தாய் உமாராணியையும் கொடுவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இதற்கிடையே, படுகாயமடைந்த சின்மயா பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சின்மயாவும் உயிரிழந்தார்.


தாய், மகள் கொலை – சுரேஷ் கைது

இரட்டைக் கொலை தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சுரேஷை கைது செய்தனர். மேலும், சம்பவத்திற்கான காரணம், கொலை நடைபெற்ற விதம் உள்ளிட்டவை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் தாய் மற்றும் மகளை கொடுவாளால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies