விழாவையொட்டி கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி வியாழக்கிழமை கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்ற நிலையில், கும்பாபிஷேகத்தின் முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம் மற்றும் வேதபாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மங்கள இசையுடன் நடைபெற்றன.
இதன் நிறைவாக பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலச தீர்த்தக் குடங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமேல் சுமந்து கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர் கோயில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஊர் மாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் சுவாமிகளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கும்பாபிஷேக விழாவில் பொரத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
.gif)

