தருமபுரி, ஆகஸ்ட் 21:
கர்நாடக மாநிலத்தில் வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பாமக சார்பில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக உண்மையை கண்டறியும் வகையில் பாமக சார்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் வேலுசாமி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் மஞ்சுநாத், சரவணன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் பகுதிக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தருமபுரியில் உள்ள பாமக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏக்கள் வேலுசாமி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மற்றும் உண்மை கண்டறியும் குழுவினர் கூறியதாவது: உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினரை சந்தித்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதாகவும், அவர்களிடம் இருந்து பல்வேறு தகவல்களை கேட்டறிந்ததாகவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் ஆடு, மாடுகளை வனப்பகுதியில் மேய்த்துவிட்டு, காணாமல் போன மாடுகளைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றதாகவும், மாடுகள் கிடைக்காத நிலையில் அதிகாலை சுமார் 5 மணியளவில் வனப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வனத்துறையினர் குமாரை துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு கண்விழித்த அந்தோணிசாமி மற்றும் ஜான்ரோஸ் பீட்டர் ஆகியோரும் அடுத்தடுத்து சுடப்பட்டதாகவும், எனவே இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குழுவினர் தெரிவித்தனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், மாநில அளவிலான விசாரணையை விட சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என பாமக உண்மை கண்டறியும் குழுவினர் வலியுறுத்தினர். மேலும், கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் பாமக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
.gif)

.jpg)