பாலக்கோடு, ஆக.19:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பி.கொல்லஅள்ளியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஊர் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நாளான நேற்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம் மற்றும் வேதபாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மங்கள இசை முழங்க பூர்ணாஹுதி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் நிரப்பிய கலச தீர்த்தக் குடங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது சுமந்து கோயிலை வலம் வந்தனர். பின்னர் கோயில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ அக்குமாரியம்மன், ஸ்ரீ மகா முனியப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கலசங்களுக்கு ஊற்றப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் அருள்மிகு ஊர் மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஊர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
.gif)

.jpg)