காரிமங்கலம், ஆக.20:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே மோதூர் கிராமத்தில் பிறந்து 21 நாட்களே ஆன ஆண் குழந்தை தண்ணீர் பேரலில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதூர் கிராமத்தைச் சேர்ந்த நாகமணி (35) – முனியம்மாள் (20) தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், முனியம்மாள் தனது தாய் வீட்டில் இருந்ததாகவும், அவரது கணவர் மோதூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக அங்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முனியம்மாள் தனது ஆண் குழந்தையை வீட்டின் வெளியே உள்ள பகுதியில் படுக்க வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணாததால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது வீட்டின் வாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் பேரலில் குழந்தை இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை உடனடியாக மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்தது. சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை தண்ணீர் பேரலில் எவ்வாறு சென்றது என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் மோதூர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
.gif)

.jpg)