தருமபுரி, ஆகஸ்ட் 1:
தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேகதாது அணை, காவிரி நீர், மின்வெட்டு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தமிழக முதலமைச்சர் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன் வலியுறுத்தினார்.
தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவாகவே நாங்கள் குரல் கொடுக்கிறோம். குருவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், இரு மாநில விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இது இந்தியா–பாகிஸ்தான் பிரச்சினை அல்ல; பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய பிரச்சினை" என்றார்.
வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு நிலவுவதை சுட்டிக்காட்டிய அவர், நதிகளை தேசிய அளவில் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த பிரதமரை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், இதற்காக அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், "பலமுறை நீதிமன்றத்தை நாடியும் காவிரி பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. எனவே முதலமைச்சர் நேரடியாக கர்நாடகா சென்று துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சிவக்குமாரும் தமிழ்நாட்டிற்கு வரலாம்; அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்கத் தயாராக உள்ளோம்" என்றார்.
முதல்வர் சென்னை நகரில் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதுடன், மேட்டூர் அணை, ஒகேனக்கல் உள்ளிட்ட காவிரி நீர்ப்பாசன பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் பிரச்சினைகளை அறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மின்சாரம் தொடர்பாக பேசிய அவர், "ஒருகாலத்தில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டு அதிகரித்துள்ளது. மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மின்வெட்டை கட்டுப்படுத்தி, மின்கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மேலும், தமிழகத்தில் கிடைக்கும் மழைநீரை முழுமையாக சேமித்து, நீர் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இறுதியாக, முதல்வர் செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்து கருத்துகளை பகிர வேண்டும் என்ற தருமபுரி மாவட்ட செய்தியாளர்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் வலியுறுத்துவேன் என தெரிவித்தார்.
வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த அவர், திருப்பதியில் சாமி தரிசனம் செய்தால் வேளாண்மை செழிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைச்சர் செயல்பட்டுள்ளார் என்றும் கூறினார்.
.gif)

.jpg)
.jpg)