Type Here to Get Search Results !

தருமபுரியில் பள்ளி தூய்மை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் – 11 மாத நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை.


தருமபுரி, ஆகஸ்ட் 25:
 


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் எல்லம்மாள் முன்னிலை வகித்தார். இதில் தருமபுரி, பென்னாகரம், கடத்தூர், பாலக்கோடு, மொரப்பூர், அரூர் உள்ளிட்ட வட்டாரங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான 11 மாத நிலுவைத் தொகையையும், காரிமங்கலம் வட்டாரத்தில் நிலுவையில் உள்ள 3 மாத தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை

தருமபுரி மாவட்டத்தில் 11 மாதங்களாக நிலுவையில் உள்ள தொகையை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.


அதன்படி,

  • தொடக்கப்பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு – ரூ.5,500
  • நடுநிலைப்பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு – ரூ.8,800
  • உயர்நிலைப்பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு – ரூ.12,650
  • மேல்நிலைப்பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு – ரூ.16,500

என நிலுவைத் தொகைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.


மேலும், நல்லம்பள்ளி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் வங்கிச் சேமிப்புக் கணக்குகள் மூலம் பணம் செலுத்தப்பட்டிருந்தும், சில இடங்களில் அந்தத் தொகை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை என சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.


அவ்வாறு பணம் வழங்காமல் இருப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, உரிய தொகையை தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


வங்கிக் கணக்கில் நேரடியாக சம்பளம் வழங்க கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளத்தை, பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் வழங்காமல், ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட பணியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைகள் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே. ரவிச்சந்திரன், துணைச் செயலாளர்கள் ஜெ. பிரதாபன், வெ.பை. மாதையன், FITU ஜி. மாதையன், சேலம் சத்யபாமா, கிருஷ்ணகிரி ஸ்ரீபிரியா, ஊத்தங்கரை அன்பரசு உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.


மேலும், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களைச் சேர்ந்த தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies