தருமபுரி, ஆக. 25:
தருமபுரி மாவட்ட அனைத்து நாயுடுகள் மகாஜன நலச்சங்கத்தின் சார்பில் புதிய அலுவலகம் மற்றும் திருமண தகவல் மையம் திறப்பு விழா, புதிய நிர்வாகிகள் அறிமுக விழாவுடன் சிறப்பாக நடைபெற்றது.
தருமபுரி நகரப் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஆர்.ஆர். காம்ப்ளக்ஸ் கீழ்தளத்தில் அமைந்துள்ள புதிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சமூக மக்களின் ஒற்றுமை, நலன் மற்றும் முன்னேற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இதில் கௌரவத் தலைவர்களாக வெங்கடேசன், பாண்டுரங்கன், பாண்டியராஜன், தலைமை ஆலோசகராக வெங்கடேஷ் பாபு, மாவட்டத் தலைவராக ராஜா, செயல் தலைவராக நடராஜன், மாவட்டச் செயலாளராக நந்தகுமார், பொருளாளராக பிரசாத், உதவிப் பொருளாளராக சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டனர்.
முக்கிய கோரிக்கைகள் குறித்து தீர்மானம்
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சங்கக் கிளைகளை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நாயுடு சமூக மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், நாயுடு சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சங்கத்தின் சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அறக்கட்டளையை புதுப்பித்து தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது தாய்மொழி தெலுங்கு என பதிவு செய்ய வேண்டும் என்றும், தருமபுரி மாவட்ட நாயுடு சங்க அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலத்தில் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் போக மீதமுள்ள நிலத்தை அளவீடு செய்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு உதவி – மருத்துவம், ரத்ததான முகாம்கள்
சங்கத்தின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்குவது, மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் உள்ளிட்ட சமூகநலப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. “ஒற்றுமையில் உயர்வு, சேவையில் சிறப்பு, சமூகத்தில் முன்னேற்றம்” என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் வெற்றிவேல் (VEEYEM), சரத்குமார், சரவணன், தாமோதரன், அருண்குமார் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.
.gif)

.jpg)