தருமபுரி, ஆகஸ்ட் 25:
தருமபுரி மாவட்ட மற்றும் நகர தேமுதிக சார்பில், கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேமுதிக கிழக்கு மாவட்டச் செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாநில அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 74 கிலோ எடையுள்ள கேக் வெட்டி, கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ஆதரவற்ற இல்லத்திற்கு நலத்திட்ட உதவி
விழாவையொட்டி முன்னதாக பாளையம்புதூர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்குவதற்காக தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கி வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செங்கொடிபுரத்தில் நகரச் செயலாளர் சங்கர் தலைமையில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அங்கு கேக் வெட்டி, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டப் பொருளாளர்கள் சீனிவாசன், ராமச்சந்திரன், மாநில கேப்டன் மன்றத் துணைச் செயலாளர் புல்லட் மாரிமுத்து, மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் மணி, தருமபுரி நகர மகளிரணி சுதா, முனியப்பன், ஒன்றியச் செயலாளர்கள் விக்னேஷ், சரவணன், மணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் செந்தாமரை, கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். கேக் வெட்டி கொண்டாடுவதுடன், ஆதரவற்றோர் இல்லத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு உணவு அளித்தும் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
.gif)

.jpg)