Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே 60 வீடுகளுக்கு 5 மாதங்களாக குடிநீர் இல்லை; காலி குடங்களுடன் பெண்கள் போராட்ட மனு.


பாலக்கோடு, ஜூலை 28:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பொரத்தூர் காலனியில், கடந்த ஐந்து மாதங்களாக 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டிய பெண்கள், காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் உள்ள பொரத்தூர் காலனியில் 85-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் 25 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள 60-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த ஐந்து மாதங்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.


குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அன்றாட தேவைகளுக்கான தண்ணீரைப் பெற தொலைதூர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்சினை குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.


இதையடுத்து, பொரத்தூர் காலனியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், சமூக ஆர்வலர்கள் பி.கே. சிவா, முத்து, நாகராஜ் ஆகியோர் தலைமையில் காலி குடங்களுடன் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று, வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமன் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 


அந்த மனுவில், உடனடியாக குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும், கடந்த ஐந்து மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததற்கான காரணத்தை விசாரிக்க வேண்டும், அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சர்வோத்தமன், புகார் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி, குடிநீர் விநியோகத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.


இதையடுத்து, அதிகாரியின் உறுதியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தங்களது கோரிக்கைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies