Type Here to Get Search Results !

தருமபுரியில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆதார் சேவை மையம் முடக்கம்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.


தருமபுரி, ஜூலை 28:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப. அவர்களின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தியன் வங்கி பிரதான கிளையில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையத்தில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆதார் சேவை மையம் மற்றும் தரவு உள்ளிட்டாளரின் ஆதார் ஐ.டி. முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மாவட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் கடந்த ஜூலை 24, 2026 அன்று இந்தியன் வங்கி பிரதான கிளையில் இயங்கி வந்த ஆதார் சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இலவசமாக மேற்கொள்ள வேண்டிய புதிய ஆதார் பதிவு சேவைக்கு ரூ.150 வசூலித்ததும், ஆதார் விவரங்களில் மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.75-க்கு பதிலாக ரூ.100, கைரேகை மற்றும் கருவிழி பதிவு சேவைக்கு ரூ.125-க்கு பதிலாக ரூ.250 வசூலிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.


இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தது உறுதியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரவு உள்ளிட்டாளரின் (Data Entry Operator) ஆதார் ஐ.டி. கடந்த ஜூலை 24-ஆம் தேதி முடக்கம் செய்யப்பட்டதுடன், இந்தியன் வங்கி பிரதான கிளையில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையமும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதார் சேவைகள் தொடர்பாக பொதுமக்கள், UIDAI நிர்ணயித்த கட்டணங்களையே செலுத்த வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies