Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் – தனியார் மனமகிழ் மன்றத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை என புகார்.


தருமபுரி, ஜூலை 10:


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மதுபானக் கடைகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இதனை பயன்படுத்தி தனியார் மனமகிழ் மன்றத்தில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.


பாலக்கோடு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பது தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள், பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டாஸ்மாக் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாகவும், அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வுடன் தங்களது பணிச்செலவுகளையும் ஈடுகட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்ட நிலையில், பாலக்கோட்டில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றத்தில் அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு பாட்டிலுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலித்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மது வாங்க வந்தவர்கள் தெரிவித்தனர்.


மேலும், சிலர் மொத்தமாக மதுபான பாட்டில்களை வாங்கிச் சென்றதாகவும், அவை கள்ளச் சந்தையில் மறுவிற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால், மது வாங்க வந்தவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.


அரசு மதுபானக் கடைகளில் விற்கப்படும் பாட்டில்களுக்கு ஒட்டப்படும் ஸ்டிக்கர் மூலம் காலி பாட்டில்கள் திரும்பப் பெறப்படும் நடைமுறை இருந்தாலும், தனியார் மனமகிழ் மன்றத்தில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும், இதன் காரணமாக காலி மதுபான பாட்டில்கள் சாலையோரங்களில் மற்றும் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் வீசப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies