கடத்தூர், ஜூலை 09:
தருமபுரி மாவட்டம் கடத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், நூற்றுக்கணக்கான காலாவதியான மருந்துகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் – சோபர்நாயகி தம்பதியினர், தங்களது ஒன்றரை வயது மகள் சன்விக்கா உடல்நலக்குறைவு காரணமாக அப்பகுதியில் உள்ள ஆர்.ஆர். தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் வழங்கப்பட்ட மருந்தின் காலாவதி தேதியை பெற்றோர் பரிசோதித்தபோது, அது ஏற்கனவே காலாவதியானது என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், தருமபுரி மாவட்ட மருந்தியல் ஆய்வாளர் கோகிலா தலைமையில் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான காலாவதியான மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவை அனைத்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட மருந்துகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்றும், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் நீண்டகாலமாக காலாவதியான மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை உடனடியாக சிறப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

