தருமபுரி, ஜூலை 10:
தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசின் “தமிழ்நாடு உரிமைகள் திட்டம்” மூலம் செயல்பட்டு வரும் ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் 2 விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்களும், வட்டார அளவில் 10 சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மறுவாழ்வு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, பேச்சு மற்றும் மொழிப் பயிற்சி, உளவியல் ஆலோசனை, கண் பரிசோதனை, சிறப்புக் கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன் அரசின் நலத்திட்ட உதவிகளும் எளிதாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட முன்களப் பணியாளர்கள் மாவட்டம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று, தேவைகளை கண்டறிந்து உரிய மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் கிடைக்க வழிகாட்டி வருகின்றனர். கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் தகவல்களுக்கு தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது அருகிலுள்ள ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம். தொடர்பு எண்கள்: 04342-230050, இலவச உதவி எண்: 1800 4250 111, சைகை மொழி (WhatsApp): 9498345350.
.gif)

.jpg)