பாலக்கோடு, ஜூலை 6:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிலட்சுமி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா பக்தர்களின் திரளான பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தொடர்ந்து யாகசாலை பூஜைகள், வேத பாராயணம் மற்றும் பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
இன்று அதிகாலை முதல் கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாம அர்ச்சனை, மகா சாந்தி ஹோமம் மற்றும் வேத பாராயணம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் மங்கள இசையுடன் நடைபெற்றன. இதன் நிறைவாக பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தக் கலசங்களை கோவில் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்து, கோயில் விமான கலசத்தின் மீது வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து திருக்குட நன்னீராட்டு நடைபெற்றதுடன், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட புனித தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர், ஸ்ரீ ஆதிலட்சுமி அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ ஆதிலட்சுமி அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.
கும்பாபிஷேக விழாவில் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் பக்தர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
.gif)


