பாலக்கோடு, ஜூலை 6:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்து, முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு நோக்கி 26-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை பாலக்கோடு அருகே மணியகாரன்கொட்டாய் பகுதியில் புதிய தேசிய நெடுஞ்சாலையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக லாரி மீது பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக கூறப்படுகிறது. விபத்தில் பேருந்து ஓட்டுநர் வினோத் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பேருந்து ஓட்டுநர் மது அருந்தியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக புதிய தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலை பணியாளர்கள் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)

