Type Here to Get Search Results !

பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம் – திரளான பக்தர்கள் தரிசனம்.




பாலக்கோடு, ஜூலை 5:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா பக்தர்களின் திரளான பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து பல்வேறு வேத சடங்குகள், ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


இன்று அதிகாலை முதல் கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாம அர்ச்சனை, மகா சாந்தி ஹோமம் மற்றும் வேத பாராயணம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் மங்கள இசையுடன் நடைபெற்றன. இதன் நிறைவாக பூர்ணாஹுதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தக் கலசங்களை கோயில் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்து, கோயில் விமான கலசங்களின் மீது வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர்.

பின்னர், திருக்குட நன்னீராட்டு நடைபெற்றதுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட புனித தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.


விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies