Type Here to Get Search Results !

எல்நினோ தாக்கம் எதிரொலி: பாலக்கோடு பகுதி விவசாயிகள் உடனே பயிர் காப்பீடு செய்ய வேளாண்மைத் துறை அறிவுரை.


பாலக்கோடு, ஜூலை 27:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் எல்நினோ (El Niño) தாக்கம் காரணமாக தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா கேட்டுக் கொண்டுள்ளார்.


2026-ஆம் ஆண்டு குறுவை பருவத்திற்காக பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) கீழ் நெல், மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, ராகி, சோளம் மற்றும் பருத்தி உள்ளிட்ட 7 பயிர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலக்கோடு வட்டாரத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடன்பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் வங்கிகள் மூலம் விருப்பத்தின் அடிப்படையில் பயிர் காப்பீட்டில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது பொது சேவை (இ-சேவை) மையங்கள் மூலம் பதிவு செய்யலாம்.


பதிவு செய்யும்போது விண்ணப்பப் படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல் (1436) அல்லது இ-அடங்கல் அல்லது விதைப்பு சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும்.


தருமபுரி மாவட்டத்தில் அதிகபட்ச காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு நெற்பயிருக்கு ₹39,100, மக்காச்சோளத்திற்கு ₹30,200, நிலக்கடலைக்கு ₹22,600, துவரைக்கு ₹18,700, பருத்திக்கு ₹14,594, ராகிக்கு ₹12,760 மற்றும் சோளத்திற்கு ₹10,300 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பயிர் காப்பீட்டிற்கான இறுதி தேதியாக நெல், சோளம் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு ஜூலை 31, 2026, மக்காச்சோளம் மற்றும் ராகிக்கு ஆகஸ்ட் 17, 2026, துவரைக்கு செப்டம்பர் 16, 2026, பருத்திக்கு செப்டம்பர் 30, 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விவசாயிகள் பிரீமியம் தொகையாக நெற்பயிருக்கு ₹782, மக்காச்சோளத்திற்கு ₹604, நிலக்கடலைக்கு ₹452, துவரைக்கு ₹374, பருத்திக்கு ₹651, ராகிக்கு ₹255 மற்றும் சோளத்திற்கு ₹206 செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றும், குறிப்பாக நெல், நிலக்கடலை மற்றும் சோளம் பயிர்களுக்கான காப்பீட்டு பதிவு ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவடைவதால் தாமதிக்காமல் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் விவரங்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்ட இணையதளம், அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், வேளாண்மை அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தை தொடர்புகொள்ளுமாறு பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா கேட்டுக் கொண்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies