Type Here to Get Search Results !

ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த ‘மை தருமபுரி’ அமைப்பினர்.


தருமபுரி, ஜூலை 28:


திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை, மனிதநேய அடிப்படையில் மை தருமபுரி அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலை விபத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.


ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும், அவர் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலும் அவரது அடையாளம் அல்லது உறவினர்கள் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், பச்சையம்மன் கோவில் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இறுதிச் சடங்கில் கந்திலி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர் கணேஷ் மற்றும் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமைப்பின் அமரர் சேவை மூலம் இதுவரை 233 ஆதரவற்ற மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் உடல்கள் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த மனிதநேயச் செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies