Type Here to Get Search Results !

தருமபுரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின மாநில மாநாட்டு பேரணி நடைபெற்றது.


தருமபுரி, ஜூலை 6:


தருமபுரியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான விவசாயிகள் மாநாட்டு பேரணி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.


தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தருமபுரி ராமக்காள் ஏரிக்கரை பகுதியில் தொடங்கிய பேரணி, ராஜாபேட்டை வரை ஊர்வலமாக நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் சென்றனர். பேரணியின் போது, மேகதாது அணைத் திட்டத்தை கைவிட வேண்டும், காவிரி நதிநீர் உரிமையை பாதுகாக்க வேண்டும், காவிரி படுகையில் உள்ள 12 மாவட்டங்களின் வேளாண்மையும், 22 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்தினர்.


மேலும், விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும், பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்த்த வேண்டும், உரங்களின் விலையை குறைக்க வேண்டும், நதிநீர் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.


அத்துடன், காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு திருப்பி விடும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஈச்சம்பாடி அணையிலிருந்து பம்பிங் மூலம் 40 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த பேரணியில் ஏராளமான விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் குப்புசாமி நன்றி தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies