Type Here to Get Search Results !

பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் விலை சரிவு – விவசாயிகள் வேதனை.


பாலக்கோடு, ஜூலை 6:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பாப்பாரப்பட்டி, பெல்ரம்பட்டி, சோமனஹள்ளி, பேகாரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அறுவடை அதிகரித்து, மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து கணிசமாக உயர்ந்துள்ளதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.


தற்போது பாலக்கோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.16-க்கும், 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை ரூ.240-க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் இதே தக்காளி ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையான நிலையில், ஒரே மாதத்தில் விலை பாதிக்கும் கீழ் சரிந்துள்ளது.


விலை வீழ்ச்சியால் சாகுபடி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட தக்காளியை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், சிலர் கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கியும், சிலர் சாலையோரங்களில் கொட்டியும் வருவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.


விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழிலாளர் கூலி மற்றும் போக்குவரத்து செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தாங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே, தக்காளி விலை சரியும் காலங்களில் தமிழக அரசு தலையிட்டு, தக்காளியை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக (தக்காளி ப்யூரி, சாஸ், பேஸ்ட் உள்ளிட்டவை) தயாரிக்கும் வசதிகள் மற்றும் அரசு கொள்முதல் அல்லது விற்பனை மையங்களை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். இதன் மூலம் விலை வீழ்ச்சியால் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies