தருமபுரி, ஜூலை 6:
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில், உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி 2026–2027-ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகளுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிய இந்த அறிமுகப் பயிற்சி வகுப்புகள், ஜூலை 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்ற 1,300 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். பயிற்சியின் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட காவல்துறையின் சிங்கப்பெண் பிரிவு உதவி ஆய்வாளர் எஸ். கிருஷ்ணவேணி தலைமையிலான குழுவினர் மாணவர்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்களுக்கான சட்ட உரிமைகள், போக்சோ (POCSO) சட்டம், அவசரகால சூழ்நிலைகளில் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து, சமூகச் செயல்பாட்டாளர், தமிழ் ஆர்வலர் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் தகடூர் ப. அறிவொளி, மாணவர்களிடம் தன்னம்பிக்கை, இலக்கு நிர்ணயம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் குறித்து ஊக்கமூட்டும் உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் தலைமை வகித்தார்.
மேலும், கல்லூரியின் உள் புகார் குழு ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியருமான சத்யா மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உரையாற்றினார். வேதியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இரா. கிருபாகரன், கல்வி உதவித்தொகைகள் மற்றும் கல்லூரி ஒழுக்க விதிமுறைகள் குறித்து விளக்கமளித்தார். கணினி அறிவியல் துறை பேராசிரியர் முனைவர் ஸ்ரீதர், 'புதுமைப்பெண்' திட்டம் குறித்து எடுத்துரைத்தார். மேலும், UMIS (University Management Information System) தொடர்பான தகவல்களை முனைவர் பி. கௌதம் திருமால்ராயன் மாணவர்களுக்கு விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முனைவர் விஜயா தாமோதரன் மற்றும் முனைவர் பி.வி. சாரதி முன்னிலை வகித்தனர். அறிமுகப் பயிற்சி வகுப்புகளின் ஒருங்கிணைப்பாளராக தாவரவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கோ. பிரபாகரன் செயல்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளர்களாக தமிழ் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கு. சிவப்பிரகாசம் மற்றும் உடற்கல்வி இயக்குநர் முனைவர் கு. பாலமுருகன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.
.gif)

