தருமபுரி, ஜூலை 6:
தருமபுரி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மனிதநேய சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மை தருமபுரி அமைப்பின் மூலம், பொருளாதார வசதி இல்லாத மாணவர் ஒருவரின் எம்.பி.ஏ. (MBA) படிப்புக்காக ரூ.23 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது. மை தருமபுரி அமைப்பினர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்புடன் ஏழை மற்றும் ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அந்த வகையில், பெற்றோரை இழந்த மாணவர் ஒருவர் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்து, இளங்கலை மேலாண்மை (BBA) படிப்பை நிறைவு செய்துள்ளார். தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் பைசுஅள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் முதுகலை மேலாண்மை (MBA) படிப்பில் சேர்வதற்கான பருவக் கட்டணத்தை செலுத்த இயலாத நிலையில், மை தருமபுரி அமைப்பை அணுகி உதவி கோரியுள்ளார். இதையடுத்து, மனிதநேய மருத்துவர் டாக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது நண்பர்களின் நிதியுதவியுடன், மாணவரின் கல்விக்காக ரூ.23,000 பருவக் கட்டணம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மேலாண்மைத்துறைத் தலைவர் கார்த்திகேயன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா ஆகியோர் மாணவருக்கு கல்வியில் சிறந்து விளங்கி உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தனர். பொருளாதார சிரமம் காரணமாக உயர்கல்வி கனவு பாதிக்கப்படாமல், நல்ல உள்ளங்களின் உதவியால் மாணவர் தனது கல்வியை தொடரும் வாய்ப்பு பெற்றிருப்பது சமூகத்தில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
.gif)

