பாலக்கோடு, ஜூலை 2:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட கணபதி ஊராட்சியில் உள்ள காட்டுக்கொட்டாய் கிராமத்தில், விபி கிராம்ஜி (VB GRAM G) திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்வோத்தமன் மற்றும் நீலமேகம் ஆகியோர் தொடங்கி வைத்து, திட்டத்தின் நோக்கம், செயல்பாடு மற்றும் பொதுமக்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
அவர்கள் பேசியதாவது: 2026 ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள விபி கிராம்ஜி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 125 நாட்கள் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. வேலை செய்ததற்கான ஊதியம் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படாவிட்டால், அதற்கான தாமத ஊதிய இழப்பீடு சட்டப்படி வழங்கப்படும். மேலும், வேலை கோரி விண்ணப்பித்தும் வேலை கிடைக்காதவர்களுக்கு வேலையின்மை உதவித்தொகை வழங்கவும் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகளின் ஊதியம் மற்றும் பிற நிதியுதவிகள் அனைத்தும் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் (DBT) செலுத்தப்படும். இதன் மூலம் வெளிப்படையான நிதிப் பரிவர்த்தனை உறுதி செய்யப்படுவதுடன், பயனாளிகள் முழுமையான பலனைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் வெறும் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமாக மட்டுமின்றி, நீண்டகாலம் நிலைத்து நிற்கக்கூடிய கிராமப்புற வாழ்வாதாரச் சொத்துகளை உருவாக்குவதிலும் முக்கியத்துவம் அளிக்கிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள், பெண்கள், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், முதியோர், திருநங்கைகள் உள்ளிட்ட சமூகத்தில் பின்தங்கிய அனைத்து தரப்பினருக்கும் இத்திட்டம் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நீர் பாதுகாப்புப் பணிகள், அடிப்படை ஊரக உள்கட்டமைப்பு பணிகள், ஊரக வாழ்வாதார மேம்பாட்டு பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகள் உள்ளிட்ட 318 வகையான பணிகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றியப் பொறியாளர் முருகன், பஞ்சாயத்து செயலாளர் முனிவேல், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)