தருமபுரி, ஜூலை 2:
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்குட்பட்ட கே.வேட்ரப்பட்டி கிராமத்தில், தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டம் (NLM-EDP) கீழ் 50 சதவீத அரசு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன செம்மறி ஆடு வளர்ப்பு பண்ணையை மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., இன்று (02.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பண்ணையில் செம்மறி ஆடுகள் பராமரிக்கப்படும் விதம், தீவன மேலாண்மை, சுகாதார பராமரிப்பு மற்றும் அரசு மானியத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பண்ணை உரிமையாளரிடம் கேட்டறிந்தார்.
கால்நடை மருத்துவமனையில் திடீர் ஆய்வு
இதனைத் தொடர்ந்து, அரூர் வட்டம் கொங்கவேம்பு கால்நடை மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், தற்போது நடைபெற்று வரும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம், மருந்துகளின் இருப்பு, பதிவேடுகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, கால்நடை மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு
பின்னர், அரூர் வட்டம் கூத்தாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு மையம், மருந்தகம் உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் பதிவேடுகள் பராமரிப்பு குறித்து மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு, மகப்பேறு மற்றும் பெண்கள் நலப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, விஷக்கடி மற்றும் விஷம் தொடர்பான சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.
மருத்துவர்களுக்கு அறிவுரை
ஆய்வின்போது, நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதுடன், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும், குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறையின்றி கிடைப்பதை உறுதி செய்ய மருத்துவ அலுவலர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் த. முருகலட்சுமி, அரூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் கனகசபை, தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
.gif)

.jpg)