Type Here to Get Search Results !

இருமத்தூரில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம்: 114 பயனாளிகளுக்கு ரூ.37.78 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி, ஜூலை 8:


தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் உள்வட்டத்திற்குட்பட்ட இருமத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில், 114 பயனாளிகளுக்கு ரூ.37.78 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., வழங்கினார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (08.07.2026) நடைபெற்ற இந்த முகாமில், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


ரூ.37.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

முகாமில் வழங்கப்பட்ட உதவிகள் விவரம்:

  • வருவாய்த் துறை சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, இ-பட்டா, பட்டா மாறுதல் மற்றும் வாரிசு சான்றிதழ்கள்.
  • சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1.82 லட்சம் மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை.
  • உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.7.56 லட்சம் மதிப்பில் மின்னணு குடும்ப அட்டைகள்.
  • பட்டு வளர்ச்சித் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3.60 லட்சம் மதிப்பில் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள்.
  • தோட்டக்கலைத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.4.79 லட்சம் மதிப்பில் நுண்ணீர் பாசனத் திட்ட மானியம்.
  • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் வீட்டு வசதி திட்ட உதவிகள்.

இவ்வாறு மொத்தம் 114 பயனாளிகளுக்கு ரூ.37,78,532 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கண்காட்சி அரங்குகள் பார்வை

முகாமிற்கு முன்பாக, வருவாய்த் துறை, வேளாண்மை, வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மகளிர் திட்டம், சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.


பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.


அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசு கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் நேரடியாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்களை நடத்தி வருகிறது. இம்முகாம்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகள் நேரடியாக பெறப்பட்டு, அவற்றுக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


அரசின் நலத்திட்டங்கள், மானியக் கடனுதவிகள், சுயதொழில் திட்டங்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும். பெறப்படும் அனைத்து மனுக்களும் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யும் என்றார்.


இந்த நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் (பொ) பெ.கி. கோவிந்தன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) மு. செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பண்டரிநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மனோஜ் முனியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு. சரவணன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் ஆ.க. அசோக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. டி. முருகலட்சுமி, காரிமங்கலம் வட்டாட்சியர் ஜெ. சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies