தருமபுரி, ஜூலை 27:
உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் பிறரின் உயிரைக் காப்பாற்றிய வீரச் செயல்களை பாராட்டும் வகையில் வழங்கப்படும் 2026-ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்சா பதக்க விருதுகளுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுதல், சாலை மற்றும் பிற விபத்துகள், தீ விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்க மீட்பு உள்ளிட்ட உயிர்காக்கும் மனிதாபிமான செயல்களுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஜீவன் ரக்சா பதக்க விருதுகள் மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.
- சர்வோத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் – மீட்பவரின் உயிருக்கு மிகுந்த ஆபத்து ஏற்பட்ட நிலையிலும், அபாயத்தில் இருந்தவரை வீரத்துடன் காப்பாற்றியவர்களுக்கு.
- உத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் – மிக அபாயகரமான சூழலில் தாமதமின்றி துணிச்சலுடன் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு.
- ஜீவன் ரக்சா பதக்கம் – தனக்கு காயம் ஏற்படும் அபாயம் இருந்தபோதும் தாமதமின்றி செயல்பட்டு உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு.
இந்த விருதுக்கு அனைத்து பாலினத்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆயுதப்படை, காவல்துறை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தீயணைப்புப் படை வீரர்களும் விண்ணப்பிக்கலாம். எனினும், அவர்கள் பணி நேரத்தில் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் இந்த விருதிற்காக பரிசீலிக்கப்படாது.
விருதுக்கான பரிந்துரைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளுக்கே பொருந்தும். அதன்படி, 2024 அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட உயிர்காக்கும் செயல்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
2026-ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்சா பதக்க விருதிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் விவரங்களை பெற்றுக் கொண்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2026 ஆகஸ்ட் 12-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpg)