Type Here to Get Search Results !

அறிக்கையில் எரியும் தெருவிளக்குகள்... கிராமத்தில் எங்கே? தவறான தகவல் கொடுக்கும் அதிகாரி! நடவடிக்கை எடுக்கப்படுமா?


மொரப்பூர், ஜூலை. 06: 


தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், இரணிமூக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட முனியன்கொட்டாய் கிராமத்தில், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக செயலிழந்த நிலையில் இருந்த உயர் கோபுர மின் விளக்கு மற்றும் செயல்படாத தெருவிளக்குகள் தொடர்பாக பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


கிராம மக்கள் சார்பில் முதன்முறையாக 19.04.2026 அன்று அளிக்கப்பட்ட மனுவில், இரண்டு கிராமங்களுக்கு பொதுவான முக்கிய பேருந்து நிறுத்தத்தில் அமைந்திருந்த உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக சீரமைக்கக் கோரப்பட்டது.


இதற்கிடையில், 30.04.2026 அன்று வீசிய பலத்த காற்றால் அந்த உயர் கோபுர மின் விளக்கு முற்றிலும் சாய்ந்துவிட்டது. இதையடுத்து, 14.05.2026 அன்று மீண்டும் மனு அளித்து, பழுதடைந்த விளக்கிற்கு பதிலாக புதிய உயர் கோபுர மின் விளக்கை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்த மனுவுக்கு 15.05.2026 அன்று வழங்கப்பட்ட பதிலில், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், 16.06.2026 அன்று மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. அதில், புதிய உயர் கோபுர மின் விளக்கை அமைப்பதுடன், கிராமத்தில் செயல்படாத அனைத்து தெருவிளக்குகளையும் ஆய்வு செய்து பழுதுகளை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.


இந்நிலையில், 06.07.2026 அன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து கிடைத்த பதிலில், "பழுதான அனைத்து தெருவிளக்குகளும் பழுது நீக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், களநிலவரம் முற்றிலும் மாறுபட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பல தெருவிளக்குகள் இன்னும் செயல்படாத நிலையில் இருப்பதுடன், பேருந்து நிறுத்தம் மற்றும் முக்கிய சாலைகள் இரவு நேரங்களில் முழுமையான இருளில் காணப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பெண்கள், மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அச்சத்துடனும் சிரமத்துடனும் பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது.


அதிகாரப்பூர்வ பதிலில் அனைத்து தெருவிளக்குகளும் பழுது நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உண்மையான களநிலவரம் அதற்கு முரணாக இருப்பதாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், ஆய்வு செய்யப்படாத பணிகள் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, முனியன்கொட்டாய் கிராமத்தில் புதிய உயர் கோபுர மின் விளக்கை உடனடியாக அமைப்பதுடன், செயல்படாத அனைத்து தெருவிளக்குகளையும் முழுமையாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும், உண்மை நிலைக்கு முரணாக பதில் அளிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies