பென்னாகரம், ஜூலை 4:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மடம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் மற்றும் கழிவறைக்குத் தேவையான தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பெற்றோர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
மடம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளியில் அடிப்படை வசதியான குடிநீர் மற்றும் கழிவறைக்கு தேவையான தண்ணீர் இல்லாததால் மாணவர்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு பல மாதங்களாக பழுதடைந்து செயலிழந்த நிலையில் இருப்பதாகவும், அதை இதுவரை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், குடிநீர் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுவதோடு, கழிவறைகளையும் முறையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாற்று குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படாததால் பள்ளி மாணவர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பழுதடைந்த ஆழ்துளைக் கிணற்றை சீரமைத்து, புதிய மின்மோட்டார் பொருத்தித் தர வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுமட்டுமின்றி, அதே பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை மினி தண்ணீர் தொட்டியும் உடைந்த நிலையில் இருப்பதால், அங்குள்ள குழந்தைகளுக்கும் குடிநீர் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்த்து, பழுதடைந்த ஆழ்துளைக் கிணற்றை சீரமைத்தல், மின்மோட்டார் அமைத்தல், அங்கன்வாடி மினி தண்ணீர் தொட்டியை புதுப்பித்தல் மற்றும் தடையற்ற குடிநீர், கழிவறை வசதிகளை உடனடியாக ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)



