Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்கம்: 3.52 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக செலுத்த நடவடிக்கை.


நல்லம்பள்ளி, ஜூலை 1:


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தேவரசம்பட்டியில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 9-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா இன்று (01.07.2026) தொடங்கி வைத்தார்.


தருமபுரி மாவட்டத்தில் தற்போது 3 லட்சத்து 45 ஆயிரத்து 500 பசு மற்றும் எருமை இன கால்நடைகள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்காக, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 52 ஆயிரத்து 50 டோஸ் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜூலை 1 முதல் ஜூலை 31, 2026 வரை சிறப்பு முகாம்கள் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.


இந்த முகாம்களின் மூலம் மாவட்டத்தில் உள்ள 4 மாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இன கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முதல் கட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்படாமல் விடுபடும் கால்நடைகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10, 2026 வரை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கால்நடை வளர்ப்போர், தங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் அல்லது கால்நடை மருத்துவமனையை தொடர்புகொண்டு இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் 100 சதவீத கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்டும் வகையில் அனைத்து கால்நடை வளர்ப்போரும் தவறாமல் தங்களது கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டணமில்லா உதவி எண் 1077-ஐ தொடர்புகொள்ளலாம். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களின் 94450 01113, 94432 72060, 94434 09346, 97861 11140 ஆகிய கைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் டாக்டர் கே. மாலதி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் த. முருகலட்சுமி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் பிரகாஷ், தருமபுரி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் சரவணன், அரூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் கனகசபை உள்ளிட்ட துறை அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies