தருமபுரி, ஜூலை 4:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் புலிக்கரையில், நபார்டு (NABARD) திட்டத்தின் கீழ் ரூ.41.70 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய கால்வாய் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., இன்று (04.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், பணிகளை தரமாகவும் விரைவாகவும் நிறைவு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் உபரி நீர்
நபார்டு திட்டத்தின் கீழ், ஜெர்த்தலாவ் கால்வாயிலிருந்து புதிய கால்வாய் அமைத்து எர்ரனஅள்ளி, புலிக்கரை, மேக்கலாம்பட்டி, அழகம்பட்டி, கம்மநாயக்கம்பட்டி, மோதுகுலஅள்ளி, சோமனஅள்ளி, காட்டேரி, கொல்லஅள்ளி, காட்டனஅள்ளி, பெத்தலஅள்ளி, ஜப்பால்குட்டை, பேகாரஅள்ளி மற்றும் பெத்தன் குட்டை உள்ளிட்ட 14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் மழைக்கால உபரி வெள்ளநீரை கொண்டு செல்லும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் 432.80 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கவுள்ளது. மேலும், 14 ஏரிகள், தடுப்பணைகள் மற்றும் அணைக்கட்டுகளில் நீரை சேமித்து வைக்கவும் இத்திட்டம் உதவும்.
70 சதவீத பணிகள் நிறைவு
திட்டப்பணிகளில் இதுவரை 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திறந்தவெளி கால்வாய் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மூடுபாறை அமைத்தல் உள்ளிட்ட மீதமுள்ள பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சின்னாறு அணையிலும் ஆய்வு
இதனைத் தொடர்ந்து, பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சின்னாறு அணையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, அணையின் தற்போதைய நீர்மட்டம், பாசன வசதி பெறும் ஆயக்கட்டு பரப்பு மற்றும் அணையை சார்ந்துள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சின்னாறு நீர்த்தேக்கத்தின் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, சாமனூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, குஜ்ஜாரஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, எர்ரனஅள்ளி மற்றும் பேளாரஅள்ளி உள்ளிட்ட பல கிராமங்கள் பாசன வசதி பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாரண்டஅள்ளி அணைக்கட்டிலும் ஆய்வு
பின்னர், மாரண்டஅள்ளியில் சின்னாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, அங்கிருந்து செயல்படுத்தப்படும் பாசனத் திட்டங்கள் மற்றும் நீர்விநியோக நிலை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ், உதவிப் பொறியாளர்கள் சாம்ராஜ், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
.gif)

