Type Here to Get Search Results !

பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு: நீர்வரத்து சரிவால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு.


ஓகேனக்கல், ஜூலை 5:


தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் நீர்வரத்து கடுமையாக குறைந்துள்ளதால், அருவிகள் பாறைகளாக காட்சியளித்து வருகின்றன. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையும் கணிசமாக குறைந்துள்ளதால், சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.


தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளதால், சுற்றுலா தளமே வெறிச்சோடி காணப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னும் முழுமையாக தீவிரமடையாததுடன், கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருப்பதும் ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


கர்நாடக மாநிலத்தின் குடகு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைகிறது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் சின்ன அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆனால் இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவாக இருந்ததால், அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 700 கனஅடி அளவில் இருந்த நீர்வரத்து, முதலில் 300 கனஅடியாக குறைந்து, தற்போது மேலும் சரிந்து 150 கனஅடியாக பதிவாகியுள்ளது. தமிழக–கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் 24 மணி நேரமும் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால், தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வந்த காவிரி நீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நீர்வரத்து குறைவால் ஒகேனக்கல் அருவிகள் பல இடங்களில் பாறைகளாக காட்சியளித்து வருகின்றன. மேலும், பரிசல் இயக்குவதற்கு போதிய நீரோட்டம் இல்லாததால் பரிசல் சவாரியும் மந்தமடைந்துள்ளது. இதன் காரணமாக பரிசல் ஓட்டிகள், எண்ணெய் மசாஜ் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சுற்றுலாவை நம்பி வாழும் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


வார இறுதி நாட்களில் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளும், அருவிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்து, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்த பின்னரே ஒகேனக்கல் மீண்டும் தனது இயற்கை எழிலையும், அருவிகளின் முழு பொலிவையும் பெறும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளூர் மக்களும் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ளவர்களும் காத்திருக்கின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies