பென்னாகரம், ஜூலை 4:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மளிகைக் கடைக்கு 14 நாட்கள் வணிகம் நடத்த தடை விதிக்கப்பட்டதுடன், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை மற்றும் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., உத்தரவின்பேரில், காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இணைந்து மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.கே. அருண் கபிலன் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் ஆகியோர், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
அதன்படி, பென்னாகரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடத்திய சோதனையில், நாகமரை சாலை, பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த மளிகைக் கடையில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூலிப் (Cool Lip) உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல்நடவடிக்கைக்காக பென்னாகரம் காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார், சம்பந்தப்பட்ட மளிகைக் கடைக்கு 14 நாட்கள் வணிகம் நடத்த தடை விதித்ததுடன், ரூ.25,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் முதல் நிலைக் காவலர் சுகவனமூர்த்தி ஆகியோர் சம்பந்தப்பட்ட கடையை மூடி சீல் வைத்து, கடை உரிமையாளரிடம் அபராத ரசீது மற்றும் 14 நாட்கள் கடையை நடத்தத் தடை விதித்த உத்தரவு நகலை வழங்கினர்.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உணவு பாதுகாப்புத் துறையின் புகார் எண் 94440 42322-க்கு வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.gif)

