தருமபுரி, ஜூலை 4:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அரசின் இலவச வீட்டுமனை பட்டா திட்டத்தின் கீழ் நிலம் பெற்ற பயனாளிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டச் செல்லும்போது ஒரு தரப்பினர் தடுத்து வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் வீடற்றோர் மற்றும் வாடகை வீடுகளில் வசித்து வந்த 110 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, நல்லம்பள்ளி தாலுகா பெரியவீட்டுகொட்டாய் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு, வீட்டுமனை இடங்களும் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டச் செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அந்த நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், "இது எங்களுடைய நிலம்" என்று கூறி வீடு கட்ட விடாமல் தடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பயனாளிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, அரசால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டிருந்தும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல பயனாளிகள் வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று பெரியவீட்டுகொட்டாய் கிராமத்தில் அரசு வழங்கிய வீட்டுமனை இடத்தில் வீடு கட்டச் சென்ற நான்கு பயனாளிகளையும், அதே தரப்பினர் தடுத்து நிறுத்தியதுடன், மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டுமனை இடங்களை பயனாளிகள் பயன்படுத்த முடியாத நிலையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, வீடு கட்ட விடாமல் தடுத்து வருவதாக கூறப்படும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பயனாளிகள் தங்களுக்குச் சொந்தமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டுவதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிர்வாக உதவியை வழங்க வேண்டும் என இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

