பாலக்கோடு, ஜூலை 1:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சி, எருதுகூடஹள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர் வசதி மற்றும் விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், இதுகுறித்து தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எருதுகூடஹள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு இயங்கி வரும் இந்தப் பள்ளியில், மாணவர்களுக்கான அடிப்படை குடிநீர் வசதி கூட இல்லாத நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. குடிநீர் மற்றும் கழிவறை பயன்பாட்டிற்குத் தேவையான தண்ணீர் இல்லாததால், பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் பல ஆண்டுகளாக நீண்ட தூரம் சென்று விவசாயக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்தும் அவலநிலை நிலவி வருவதாக பெற்றோர்களும் கிராம மக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், கிராமத்திற்கு வழங்கப்படும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் சீராக கிடைப்பதில்லை என்றும், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறும் பல ஆண்டுகளாக பழுதடைந்து பயன்பாடின்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிராம மக்களும் குடிநீர் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வீட்டு உபயோகம் மட்டுமின்றி, கால்நடைகளான ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றின் தேவைகளுக்குக் கூட நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமின்றி, பள்ளியில் பயிலும் மாணவர்களும், கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் கிரிக்கெட், கபடி, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்று வருகின்றனர். இருப்பினும், அவர்களின் திறமையை மேலும் வளர்க்க தேவையான அடிப்படை விளையாட்டு மைதானம் கூட இல்லாதது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள் போதைப் பழக்கங்களின் பிடியில் சிக்கி வரும் நிலையில், எருதுகூடஹள்ளி கிராம இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்தி, பிற கிராமங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான விளையாட்டு வசதிகளை அரசு உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். குடிநீர் பிரச்சினை குறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும், "ஊராட்சியில் போதிய நிதி இல்லை" என்ற பதிலையே அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், இதுவரை எந்தவித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பள்ளியில் உடனடியாக பாதுகாப்பான குடிநீர் வசதி ஏற்படுத்துதல், பழுதடைந்த ஆழ்துளைக் கிணற்றை சீரமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எருதுகூடஹள்ளி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)

.jpg)