பாலக்கோடு, ஜூன் 25:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிளையில், கூலி தொழிலாளி ஒருவரிடம் ரூ.1.31 லட்சம் பணம் மர்ம நபர்களால் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. பாலக்கோடு அருகே எல்லுகான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மணிமேகலை (50) என்பவர், மகளிர் சுய உதவிக்குழு மூலம் பெற்ற கடன் தொகையை பயன்படுத்தி தனது அடமான நகைகளை மீட்பதற்காக வங்கிக்கு சென்றிருந்தார்.
வங்கியில் பணம் செலுத்துவதற்கான படிவத்தை நிரப்பத் தெரியாததால், அங்கிருந்த மற்றொரு நபரின் உதவியை நாடியுள்ளார். பின்னர் படிவத்தில் பிழை இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்ததால், அதை மீண்டும் பூர்த்தி செய்ய முயன்றுள்ளார். அப்போது வங்கியில் நிலவிய கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், மணிமேகலை வைத்திருந்த மஞ்சள் நிற பையை பிளேடால் அறுத்து, அதிலிருந்த ரூ.1.31 லட்சம் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பணம் திருடப்பட்டதை அறிந்த மணிமேகலை அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதைத் தொடர்ந்து, வங்கி பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் வங்கியின் முன்பக்க நுழைவாயிலை மூடியுள்ளனர். இருப்பினும், அதற்குள் பணத்தை திருடியவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மணிமேகலை, வங்கி மேலாளர் மற்றும் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருவதாக தெரிவித்த அவர், தன்னுடைய பணத்தை மீட்டுத் தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், வங்கிகளில் பணம் பறிப்பு, நகை திருட்டு, ஏடிஎம் மோசடி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
.gif)

.jpg)