மாரண்டஅள்ளி, ஜூன் 25:
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா பக்தர்களின் திரளான பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணபதி பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே கலச ஆராதனை, நவக்கிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாம பாராயணம், மகா சாந்தி ஹோமம் மற்றும் வேத பாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருக்குட நன்னீராட்டு மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கலச தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ திரௌபதியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் மாரண்டஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி, குண்டுப்பள்ளம், சந்திராபுரம், காளிகவுண்டர் கொட்டாய், உலகானஅள்ளி, அகரம், வேலாங்காடு, கல்லாகரம், ஆஞ்சநேயபுரம், செவத்தாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
.gif)

.jpg)