ஓகேனக்கல், ஜூலை 1:
"மேகதாது அணையை தடுப்போம்... காவிரியை காப்போம்" என்ற முழக்கத்துடன் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று முதல் நான்கு நாள் விழிப்புணர்வு நடைபயணத்தை தொடங்கினார். தமிழகத்தில் காவிரி பாயும் 11 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த நடைபயணத்தின் முதல் நாள் நிகழ்ச்சி, காவிரி தமிழ்நாட்டிற்குள் நுழையும் பிலிகுண்டுலு பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் மேகதாது அணைத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நான்கு நாள் நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. பிலிகுண்டுலுவில் தொடங்கும் இந்த நடைபயணம் சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாயும் 11 மாவட்டங்கள் வழியாகச் சென்று, ஜூலை 4-ஆம் தேதி பூம்புகாரில் நிறைவடையும் என்றார்.
இந்த நடைபயணத்திற்கு விவசாயிகள், விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"காவிரி தமிழ்நாட்டின் உயிர்நாடி"
தமிழ்நாட்டின் உயிர்நாடி காவிரி ஆறு என்றும், மாநிலத்தின் சுமார் 5.5 கோடி மக்கள் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்காக காவிரியை நம்பியிருப்பதாகவும் அன்புமணி தெரிவித்தார். காவிரி பாயும் 11 மாவட்டங்களின் விவசாயம் முழுமையாக இந்த நதியைச் சார்ந்தே இருப்பதாகவும் அவர் கூறினார்.
"மேகதாது அணை சுற்றுச்சூழலுக்கு பேராபத்து"
மேகதாது அணை கட்டப்பட்டால் சுமார் 12,500 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்படும் என்றும், அரிய வகை வனவிலங்குகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் குற்றம்சாட்டினார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டிய நிலையில், அதற்கு முரணாக கர்நாடக அரசு வனப்பகுதிகளை அழிக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"2028 தேர்தலை முன்னிட்டு அரசியல்"
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தனது அரசியல் நோக்கத்திற்காகவும், 2028 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்பவும் மேகதாது அணைத் திட்டத்தை முன்னிறுத்தி வருகிறார் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
"தமிழகத்திற்கு குடிநீரும் பாதிக்கப்படும்"
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீரின் அளவு குறையும் என்றும், விவசாயம் மட்டுமல்லாமல் குடிநீர் திட்டங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் பாதிக்கப்படும் என்றும், வீராணம் ஏரி வழியாக சென்னைக்கு வழங்கப்படும் குடிநீருக்கும் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
"தமிழக அரசு தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்"
மேகதாது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், காவிரி தொடர்பாக ஏற்கனவே நடுவர் மன்றம் உள்ள நிலையில், தனியாக மேகதாது நடுவர் மன்றம் தேவையில்லை என்றும் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்தார்.
"ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மக்கள் ஒன்றிணைய வேண்டும்"
மேகதாது அணை விவகாரம் காவிரி கரையோர மாவட்ட மக்களின் பிரச்சினை மட்டுமல்ல; தமிழகம் முழுவதையும் பாதிக்கும் பிரச்சினை என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்ததைப் போல, இந்த விவகாரத்திலும் அரசியல், சாதி, மத வேறுபாடுகளை கடந்து மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
ராகுல் காந்திக்கு வேண்டுகோள்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் காடுகள் அழிக்கப்படுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வரும் ராகுல் காந்தி, அதே சுற்றுச்சூழல் அக்கறையுடன் மேகதாது அணைத் திட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தால் வனங்கள், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
.gif)

.jpg)