பென்னாகரம், ஜூலை 8:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மை பாரத் கேந்திரா – தருமபுரி, ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி, கடல் புறா இளைஞர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடின.
இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரியின் இயக்குநர் சிலம்பரசன் தலைமை வகித்தார். கடல் புறா இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன், பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல், ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி ஆசிரியர்கள் கலா, சுதா, கிறிஸ்டினா, சரஸ்வதி, அதியமான் டிவி இயக்குநர் கபில்தேவ், சமூக ஆர்வலர் நஞ்சப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது வாழ்க்கை வரலாறு, நாட்டிற்காக அவர் ஆற்றிய பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழாவையொட்டி கட்டுரை, ஓவியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மை பாரத் கேந்திரா – தருமபுரி சார்பில் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் வகையில் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேரணியும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில், மை பாரத் கேந்திரா அலுவலகப் பணியாளர் ரா. முனியப்பன் நன்றியுரை வழங்கினார்.
.gif)

