தருமபுரி, ஜூலை 8:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (TTDC) தமிழ்நாடு ஓட்டலில், ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சுவைத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 33 தமிழ்நாடு ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றான ஒகேனக்கல் தமிழ்நாடு ஓட்டல், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான தங்கும் வசதி மற்றும் சுகாதாரமான உணவு வழங்கி வருகிறது.
ஒகேனக்கலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அவர்களுக்கு தரமான உணவை குறைந்த விலையில் வழங்கும் நோக்கில், தமிழ்நாடு ஓட்டல் நிர்வாகம் ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுலா தலங்களில் பொதுவாக உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும் என்ற கருத்து நிலவி வரும் நிலையில், அரசின் சுற்றுலாத்துறை ஓட்டலில் குறைந்த விலையில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக, அதிக விலை உணவுகளை வாங்க முடியாத சாதாரண சுற்றுலா பயணிகளும், குடும்பத்துடன் வருபவர்களும் இந்த சலுகையை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். ரூ.99-க்கு சிக்கன் பிரியாணி கிடைப்பதால், பலரும் தமிழ்நாடு ஓட்டலுக்கு நேரடியாக வந்து வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே சிக்கன் பிரியாணி விற்பனை அதிகரித்ததாக ஓட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவை மலிவு விலையில் வழங்கும் இந்த முயற்சி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இதுபோன்ற சலுகைகளை தமிழகத்தின் பிற சுற்றுலா மையங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் சுற்றுலா பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
.gif)

