Type Here to Get Search Results !

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி, ஜூலை 27:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 642 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப. வழங்கினார்.


மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுமக்கள் சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.


பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டு, அரசின் விதிமுறைகளின்படி தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தருமபுரி பிரிவு விளையாட்டு விடுதி மாணவிகள், மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர். அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான 17 வயதிற்குட்பட்டோருக்கான இறகுப்பந்து தரவரிசைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்டார் அகாடமி திட்ட மாணவரையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் சிவரஞ்சன், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ராஜா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) ஷெர்லி ஏஞ்சலா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies