Type Here to Get Search Results !

குடிநீர் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக அலைக்கழிப்பு? பாலக்கோடு பேரூராட்சி மீது குற்றச்சாட்டு.


தருமபுரி, ஜூலை 6:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில், குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்திய பின்னரும் கடந்த நான்கு ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என மாற்றுத்திறனாளி ஒருவர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட கோட்டை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குணசேகரன் (37) மாற்றுத்திறனாளி ஆவார். அவரது மனைவியும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என கூறப்படுகிறது. தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கக் கோரி, கடந்த 2022-ஆம் ஆண்டு பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகத்திடம் குணசேகரன் விண்ணப்பித்துள்ளார். பேரூராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி குடிநீர் இணைப்புக்கான ரூ.14,500 தொகையை வங்கி வரைவோலையாக (Demand Draft) செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.


ஆனால், பின்னர் கூடுதலாக ரூ.5,000 வழங்கினால் மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். குடிநீர் இணைப்புக்கான நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும், கூடுதல் தொகையை செலுத்த தன்னிடம் வசதி இல்லாததால், மனிதாபிமான அடிப்படையில் குடிநீர் இணைப்பு வழங்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குணசேகரன் வேதனை தெரிவித்துள்ளார்.


மாற்றுத்திறனாளியான தானும், தனது மனைவியும் தினமும் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவலநிலையில் இருப்பதாகவும், உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக அவர் கூறினார். இதுகுறித்து சமூக ஆர்வலர் பி.கே. சிவா கூறுகையில், பாலக்கோடு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்திய நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இணைப்பு வழங்கப்படாமல் காத்திருப்பதாக தெரிவித்தார்.


மேலும், கூடுதல் தொகை வழங்காதவர்களுக்கு வேண்டுமென்றே குடிநீர் இணைப்பு வழங்காமல் பேரூராட்சி நிர்வாகம் காலதாமதம் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். எனவே, இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்திய அனைத்து பயனாளிகளுக்கும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பி.கே. சிவா மற்றும் மாற்றுத்திறனாளி குணசேகரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies