Type Here to Get Search Results !

வத்தல்மலையில் ரூ.83.56 லட்சத்தில் அரசு தாவரவியல் பூங்கா; வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


தருமபுரி, ஜூலை 25:


தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் அரசு தாவரவியல் பூங்கா பணிகளை மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக ரூ.83.56 லட்சம் மதிப்பீட்டில் வேலி அமைத்தல், டான்ஹோடா விற்பனை நிலையம், நுழைவுச்சீட்டு வழங்கும் அறை, பாதுகாவலர் அறை, கழிவறைகள் மற்றும் நிர்வாகக் கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.


இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் விளையாட்டு பகுதி, நடைபாதை, பார்வையாளர்களுக்கான கழிப்பறை வசதி, வாகன நிறுத்துமிடம், தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி (GLR), ஆழ்துளைக் கிணறுகள், கேசிபோ (Gazebo), பசுமைத் தாவர அமைப்புகள் உள்ளிட்ட கூடுதல் பணிகளும் நடைபெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து தரமாக நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆய்வு

இதனைத் தொடர்ந்து, வத்தல்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு மையம், மருந்தகம் உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு, சிகிச்சை நடைமுறைகள் மற்றும் பதிவேடுகள் குறித்து மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு, மகளிர் நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு மற்றும் விஷக்கடி சிகிச்சைக்கான மருந்து இருப்பு உள்ளிட்ட வசதிகளையும் ஆய்வு செய்தார்.


நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யவும், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்கவும், குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை குறையின்றி வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.


சுற்றுலா மைய வசதிகளும் பார்வையிட்டார்

பின்னர், வத்தல்மலை சுற்றுலா மையத்தில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு உணவகம், பார்வையாளர் வசதிகள் மற்றும் வியூ பாயின்ட் உள்ளிட்ட சுற்றுலா அடிப்படை கட்டமைப்புகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் து. மீனாட்சி சுந்தரம், உதவி சுற்றுலா அலுவலர் சி. லவிஷா மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies