தருமபுரி, ஜூலை 18:
தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட காலத்திற்கு கடைகளை மூடவும் உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் தலைமையில், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி ரகசிய தகவலின் அடிப்படையில் அனுமந்தபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, அனுமந்தபுரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், காரிமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதவியுடன் கடைக்கு 14 நாட்கள் விற்பனைத் தடை விதிக்கப்பட்டு, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல், மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், வெள்ளிச்சந்தை நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 30 நாட்களுக்கு கடையை செயல்படுத்த தடை விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
.gif)

.jpg)