தருமபுரி, ஜூலை 2:
தருமபுரி நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்த பெண் ஒருவரை தன்னார்வலர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிய நிலையில், ஆறு மாத தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவர் முழுமையாக குணமடைந்து, விரைவில் தனது குடும்பத்தினருடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மை தருமபுரி அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த 2025 நவம்பர் 19-ஆம் தேதி, மை தருமபுரி அமைப்பின் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அறம் அறக்கட்டளை நிர்வாகி ரமேஷ் ஆகியோர், பெண் காவலர்களின் உதவியுடன் மஞ்சுளாவை பாதுகாப்பாக மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மனநல காப்பகப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கடந்த ஆறு மாதங்களாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அளித்த தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பின் மூலம் மஞ்சுளா முழுமையாக குணமடைந்துள்ளார்.
இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவமனையின் மனநல காப்பகப் பிரிவு மருத்துவர் டாக்டர் பிரீத்தா, மஞ்சுளாவின் குடும்பத்தினரை ஆந்திர மாநிலத்தில் கண்டறிந்து, அவரது உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ளார். விரைவில் மஞ்சுளா தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த மனிதநேயமான பணியை பாராட்டும் வகையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மனோகரன், மஞ்சுளாவை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், மீட்பு மற்றும் மறுவாழ்வு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கும் பாராட்டு தெரிவித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி தவித்த ஒருவருக்கு மீண்டும் குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தித் தந்த இந்த மனிதநேய முயற்சி, சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
.gif)


