தருமபுரி, ஜூலை 17:
மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியரும், முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலருமான வே. சரவணன், இ.ஆ.ப., இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை தலைமை அலுவலர்களும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான சுய கணக்கெடுப்பு (Self Enumeration) முறையை இணையதளம் மூலம் மேற்கொண்டனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்காக பொதுமக்கள் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை சுய கணக்கெடுப்பு வசதியை பயன்படுத்தி தங்களது குடும்ப விவரங்களை இணையதளம் மூலம் பதிவு செய்து SE ID பெற்றுக்கொள்ளலாம். பின்னர் கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது அந்த எண்ணை வழங்கினால் போதுமானது.
மாவட்டத்தில் இப்பணிக்காக 2,376 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 399 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கணக்கெடுப்பாளர்கள் வீட்டிற்கு வரும்போது அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து, குடும்பம் மற்றும் வீடு தொடர்பான சரியான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை திட்டமிடுவதற்கான முக்கிய தேசியப் பணியாகும். எனவே, அனைத்து குடும்பங்களும் துல்லியமான தகவல்களை வழங்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் சுய கணக்கெடுப்பை நிறைவு செய்து இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் கா. இராஜாங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் ஜார்ஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பா. ஷெர்லி ஏஞ்சலா, அரூர் வட்டாட்சியர் வள்ளி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், வருவாய் துறையின் சார்பில் பயனாளி ஒருவருக்கு நத்தம் பட்டாவிற்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
.gif)

.jpg)