Type Here to Get Search Results !

உலக உணவு பாதுகாப்பு தினம்: தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


தருமபுரி, ஜூன் 9:


தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சார்பில், உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் சுதா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரி மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முருகன், பட்டதாரி ஆசிரியை கிரிஜா, இசை ஆசிரியை சாய் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் பி.கே. கைலாஷ் குமார் தலைமையில், “உலக உணவு பாதுகாப்பு தினம் – 2026” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு “சுமையிலிருந்து தீர்வு வரை – எங்கும் பாதுகாப்பான உணவு” (From Burden to Solutions – Safe Food Everywhere) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக உணவு பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.


நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் கைலாஷ் குமார், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரவுகளின்படி பாதுகாப்பற்ற உணவுகளை உட்கொள்வதால் உலகளவில் ஆண்டுதோறும் 86.6 கோடி மக்கள் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்றும், சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.


பாதுகாப்பான உணவை உறுதி செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வலியுறுத்தும் 5C கொள்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார். அதாவது:


  • Cleaning (சுத்தம்)
  • Cooking (சரியான முறையில் சமைத்தல்)
  • Chilling (உணவுகளை உரிய வெப்பநிலையில் பாதுகாத்தல்)
  • Cross Contamination Prevention (கலப்பு மாசுபாட்டைத் தடுத்தல்)
  • Communication (உணவு தொடர்பான தகவல்களை அறிதல்)


ஆகிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என அவர் வலியுறுத்தினார்.


தொடர்ந்து, ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களின் லேபிள்களில் கவனிக்க வேண்டிய விவரங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்தார். தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனம், உணவு பாதுகாப்பு உரிம எண், ஊட்டச்சத்து விவரங்கள், சைவ-அசைவ குறியீடுகள் உள்ளிட்ட தகவல்களை சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.


மேலும் தேயிலை, தேன், சமையல் எண்ணெய், நெய், மஞ்சள் தூள், மிளகு, வெல்லம் மற்றும் செர்ரி பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து நேரடி செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.


நிகழ்ச்சியின் நிறைவில், “உணவு பாதுகாப்பு, சுகாதாரம், தரம், கட்டுப்பாடு மற்றும் உணவு வீணாவதைத் தவிர்ப்பதன் அவசியம் குறித்து பிறருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்” என்ற உறுதிமொழியை 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.


இந்த நிகழ்வில் பள்ளி உடற்கல்வி இயக்குநர் தங்கரத்தினம், ஆசிரியை அருள்செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies