தருமபுரி, ஜூன் 8:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே விவசாய நிலத்திற்கு காவல் காக்கச் சென்றபோது காட்டு யானை தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
பென்னாகரம் அருகே உள்ள கே. குள்ளாத்திரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் (70). விவசாயியான இவர், கடந்த 16.01.2026 அன்று இரவு பென்னாகரம் வனச்சரகத்தை ஒட்டிய பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் குடிசை அமைத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து வந்த ஒற்றை காட்டு யானை, மகாராஜன் தங்கியிருந்த குடிசையை சேதப்படுத்தி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மகாராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மறுநாள் காலை விவசாய பணிக்காக அப்பகுதிக்கு சென்றவர்கள் குடிசை சேதமடைந்திருந்ததையும், மகாராஜன் உயிரிழந்த நிலையில் கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உறவினர்கள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பென்னாகரம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு, ஒகேனக்கல் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த மகாராஜனுக்கு மணிமேகலை என்ற மனைவியும், மாதையன் என்ற மகனும் உள்ளனர். மகாராஜனின் இறுதிச்சடங்கு செலவிற்காக சம்பவம் நடைபெற்ற நாளிலேயே வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் முதல் கட்ட நிவாரணமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின்படி, மீதமுள்ள ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் நிவாரணத் தொகைக்கான காசோலையை பென்னாகரம் வனச்சரகர் ராஜ்குமார் தலைமையில், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் மகாராஜனின் குடும்பத்தினரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)